Popular Posts

Sunday, June 23, 2019

ஹஜ்- இறுதிக்கடமை.



உடல் பலமும், பண பலமும் நிறைவாகப் பெற்றவர்கள் தங்களின் வாழ்நாளில் ஒரு தடவையாவது புனித ‘மக்கா’ சென்று ‘ஹஜ்’ செய்வது முஸ்லிம்கள் மீது கட்டாயக் கடமை ஆகும்.


*♨ தமிழகத்தில் இருந்து இந்த ஆண்டு 4394 பேர் புனித ஹஜ் பயணம்*

*♦சென்னை : தமிழகத்தில் இருந்து இந்த ஆண்டு 4394 பேர் புனித ஹஜ் பயணம் செல்ல இருக்கின்றனர்.*

*♦அரசு ஒதுக்கீட்டின் கிழ் இந்த ஆண்டு 4394 பேர் ஹஜ் பயணம் மேற்கொள்ள இருப்பதாக அமைச்சர் நிலோபர் கமில் தகவல் தெரிவித்துள்ளார்.*

*♦இடஒதுக்கீடு பெறாமல் தனியார் மூலமாக 10 ஆயிரம் பேர் ஹஜ் பயணம் செல்ல உள்ளனர். தமிழகத்தில் இருந்து ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 4 வரை, ஐந்து குழுக்களாக ஹஜ் பயணம் மேற்கொள்வார்கள் என்று அமைச்சர் நிலோபர் கபில் தெரிவித்துள்ளார்.*





இந்திய ஹஜ் கமிட்டி மூலம் ஆண்டுதோறும்   கிட்டத்தட்ட 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள உள்ளனர். இதேபோல் தனியார் சுற்றுலா அமைப்புகள் மூலம் 60 ஆயிரம் பேர் பயணம் செய்ய உள்ளனர்.

இதன்படி கிட்டத்தட்ட 2 லட்சத்திற்கும் அதிகமான ஹாஜிகள்  ஹஜ் பயணம் மேற்கொள்ள உள்ளனர்.

ஹஜ் பயணம் மேற்கொள்ளும் 2 லட்சம் பேரில் 48 சதவீதத்தினர் பெண்கள் ஆவர்.


இதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து விமானங்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.  இந்திய பயணிகளுக்காக மெக்காவில் 11 இடங்களிலும், மதினாவில் 3 இடங்களிலும் சுகாதார மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இஸ்லாத்தின் அடிப்படையான கடமைகளில் ஏராளமான உள்ளார்ந்த தத்துவங்கள் அடங்கியுள்ளன. இஸ்லாத்தின் ஒவ்வொரு கடமையிலும் அபூர்வமான, ஆச்சரியமான, தத்துவரீதியான அம்சங்கள் நிறைந்து காணப்படுகின்றன.

 இஸ்லாத்தின் இறுதிக் கடமையாம் ‘ஹஜ் பயணம் கடமையாக்கப்பட்டதற்கு பலவிதமான தத்துவ காரணங்கள் உண்டு. அவற்றை இங்கு விரிவாகக் காண்போம்.

புனித ‘மக்கா’ சென்று இஸ்லாம் கூறும் சில வணக்க வழிபாடுகள் செய்வது ‘ஹஜ்’ என்று அழைக்கப்படுகிறது.

உடல் பலமும், பண பலமும் நிறைவாகப் பெற்றவர்கள் தங்களின் வாழ்நாளில் ஒரு தடவையாவது புனித ‘மக்கா’ சென்று ‘ஹஜ்’ செய்வது முஸ்லிம்கள் மீது கட்டாயக் கடமை ஆகும்.

‘இன்னும் அல்லாஹ்வுக்காக அவ்வீட்டை ஹஜ் செய்தல் அதன்பால் சென்று வர சக்தி பெற்றவர் மீது கடமையாகும்’ என்பது திருக்குர்ஆன் (3:97) வசனமாகும்.

புனித ஹஜ் பயணம் தொடர்பான நபிமொழிகள் வருமாறு:-

“நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்களுக்கு ஆற்றிய உரையில், ‘மக்களே, உங்கள் மீது அல்லாஹ் ஹஜ் கடமையாக்கியுள்ளான் ; எனவே நீங்கள் ஹஜ் செய்யுங்கள்’ என்றார்கள். ஒரு தோழர் எழுந்து, ‘அல்லாஹ்வின் தூதரே ஒவ்வொரு ஆண்டுமா ஹஜ் கடமை? என மூன்று தடவை கேட்டார்’ அதுவரை மவுனமாக இருந்த மாநபி (ஸல்) அவர்கள் ‘நான் ஆம் என்றால் அது ஒவ்வொரு ஆண்டும் கடமையாகிவிடும்’ (அவ்வாறு அது ஒவ்வொரு ஆண்டும் கடமை இல்லை) என பதிலளித்தார்கள்” (அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புகாரி).

“ஹஜ் செய்வது முந்திய பாவங்கள் அனைத்தையும் அழித்துவிடும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்” (அறிவிப்பாளர் : அமர் பின் ஆஸ் (ரலி) நூல் : முஸ்லிம்)

“ஹஜ் மற்றும் உம்ரா ஆகிய இரண்டில் ஒன்றை மற்றொன்றோடு பின்பற்றுங்கள். தங்கம் மற்றும் வெள்ளி, இரும்பு ஆகியவைகளின் அழுக்குகளை கொல்லனின் நெருப்பு போக்குவது போன்று, அவ்விரண்டும் ஏழ்மை மற்றும் பாவத்தையும் போக்கிவிடுகிறது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்” (அறிவிப்பாளர் : இப்னு மஸ்ஊத் (ரலி) நூல் : திர்மிதி)

“ஹஜ் செய்பவர்களும், உம்ரா செய்பவர்களும் இறைவனின் தூதுக்குழுவினர் ஆவர். இறைவனிடம் அவர்கள் பிரார்த்தித்தால், அதை அவன் ஏற்றுக் கொள்கிறான், இறைவனிடம் அவர்கள் பாவமன்னிப்புக் கோரினால், அவன் அவர்களுக்கு மன்னிப்பு வழங்குகிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்” (அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) நூல் : நஸயீ, இப்னுமாஜா)

“ஹஜ் பயணத்திற்கு செலவு செய்வது இறைவழிப்பாதையில் ஏழுநூறு மடங்கு செலவு செய்வதைப் போன்று ஆகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.” (அறிவிப்பாளர் : புரைதா (ரலி) நூல் : அஹ்மது)

இஸ்லாமியக் கடமைகளை நான்கு விதமாக கூறலாம். 1) உள்ளம் சார்ந்தது. இதுதான் அடிப்படை. இதற்கு ஈமான் (இறை நம்பிக்கை) என இஸ்லாம் கூறுகிறது.

2) உடல் சார்ந்தது. இது தொழுகை மற்றும் நோன்பை குறிக்கிறது.

3) பொருள் சார்ந்தது. இது ஜகாத் மற்றும் ஸதகா, அன்பளிப்பு, வக்ப், அழகிய கடன் போன்ற பொருளாதாரம் சார்ந்த கடமைகளை குறிக்கிறது.

4) உடல் மற்றும் பொருள் ஆகிய இரண்டையும் உள்ளடக்கிய கடமை தான் புனித ஹஜ் எனும் கடமையாகும். உடல் பலமும், பணபலமும் ஒன்று சேர பெற்றவர்களுக்குத்தான் ஹஜ் கடமை. இரண்டு தகுதிகளையும் பெறாதவர் அல்லது இரண்டில் ஒரு தகுதியை பெறாதவர் மீது ஹஜ் கடமையாகாது.

இதை பின்வரும் திருக்குர்ஆனின் வசனம் தெளிவுபடுத்துகிறது.

“அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை” (திருக்குர்ஆன் 3:97)

ஹஜ் என்பது உள்ளம் ஆசைப்படும் வணக்கம், உயிரோட்டமான வணக்கம். அது ஒரு உலக மகாநாடு. அங்கு சகோதரத்துவம் வெளிப்படுகிறது, சமாதானம் நிலவுகிறது. அன்பு பெருகுகிறது, அமைதி நிலவுகிறது.

தேசம், இனம், மொழி, நிற வேறுபாடுகளைக் களைந்து ஒரேவிதமான வெண்மை நிற சீருடைகளை அணிந்து இறையில்லத்தில் கூடி தங்கள் ஹஜ் கடமையை நிறைவேற்றுகிறார்கள். இது இஸ்லாமியர்களின் ஒற்றுமையை உலகிற்கு எடுத்துக்காட்டுகிறது.

பல உள்ளார்ந்த தத்துவங்களை புனித ஹஜ் பயணம் எடுத்துரைக்கிறது. இத்தகைய தத்துவங்களின் அடிப்படையில்தான் முஸ்லிம்கள் தமது உலக வாழ்வை அமைத்துக் கொள்ளும்படி இஸ்லாமும் விரும்புகிறது. அதுவே இறைவனின் விருப்பமும், இறைத்தூதரின் விருப்பமும் ஆகும்.






தல்பியா

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : ஒரு மனிதன் தன்னுடைய ஒட்டகத்திலிருந்து கீழே விழுந்து இறந்து விட்டான். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அந்த மனிதரை சித்ர் என்ற மர இலை கொண்டும், தண்ணீர் கொண்டும் கழுவி, இரண்டு இஹ்ராம் துண்டுகளுடன் கபனிடுங்கள், அவரது தலையை மூடவும் வேண்டாம், அவருக்கு நறுமணங்கள் இடவும் வேண்டாம் என்று கூறினார்கள். தல்பியாக் கூறியவாறே இவர் மறுமை நாளில் உயிர் கொடுத்து எழுப்பப்படுவார் எனவும் கூறினார்கள்.(புகாரி, முஸ்லிம் மற்றும் இப்னு ஹுஸைமா).
சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : யாரொருவர் தல்பியாக் கூறுகின்றாரோ அவருக்காக கல்லும், மரமும் அல்லது அவருக்கு இடப்புறமும் வலப்புறமும் பூமியில் உள்ள அனைத்தும் அவருடன் இணைந்து தல்பியாக் கூறுகின்றன. (அத்திர்மிதி, இப்னு மாஜா, மற்றும் அல் பைஹக்கி). 

கறுப்புக் கல்

அப்துல்லா பின் உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள் : முஹம்மது (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறக் கேட்டிருக்கின்றேன், கறுப்புக் கல்லையும், எமனி முனையையும் தொடுவது பாவங்களைப் போக்கி விடும். (அஹ்மது)
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கறுப்புக் கல்லைப் பற்றி முஹம்மது (ஸல்) இவ்வாறு கூறினார்கள் என்று அறிவிக்கின்றார்கள் :
இறைவன் மீது சத்தியமாக! மறுமைநாளிலே பார்க்கக் கூடிய இரண்டு கண்களைக் கொண்டும், பேசக் கூடிய நாக்கைக் கொண்டும், அதனை யார் வாய்மையுடன் தொட்டார்கள் என்பதை அறிவிக்கும் பொருட்டு கறுப்புக் கல்லை இறைவன் எழும்பச் செய்வான். (அத்திர்மிதி)
இங்கே வாய்மையுடன் என்பது இறைவனுக்குக் கீழ்ப்படிந்த நிலையிலும், முஹம்மது (ஸல்) அவர்களது சுன்னத்தைப் பேணிய நிலையிலும் அதனைத் தொட்டார்களா என்பதனை அறிவதற்காகத் தானே தவிர வெறுமனே ஒரு கல்லைத் தொடுவது போல தொட்டதற்காக அல்ல என்று ஷேக் அல்-அல்பானி அவர்கள் விளக்கமளிக்கின்றார்கள்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அறிவித்ததாக அறிவிக்கின்றார்கள் : இந்தக் கறுப்புக் கல் பாலை விட வெண்மையான நிறத்தில் சொர்க்கத்திலிருந்து இறங்கியது, ஆதம் (அலை) அவர்களது சந்ததிகள் செய்த பாவத்தின் காரணமாக அது கறுப்பாகி விட்டது. (அத்திர்மிதி)

தலைமுடிகளைக் களைவது
முஹம்மது (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :
 யா அல்லாஹ்! யார் தங்களது தலைமுiடியை மழித்துக் கொண்டார்களோ அவர்களுக்கு உன்னுடைய மன்னிப்பை வழங்குவாயாக! என்று கூறிய பொழுது அங்கிருந்தவர்கள்;, தலைமுடிகளைக் குறைத்துக் கொண்டவர்கள் பற்றிக் கேட்டார்கள், முஹம்மது (ஸல்) அவர்கள், யா அல்லாஹ்! தங்கள் தலைமுடியைக் குறைத்துக் கொண்டவர்களுக்கும் உன்னுடைய மன்னிப்பை வழங்குவாயாக! (என்று பிரார்த்தனை புரிந்தார்கள்). (மீண்டும்) தலைமுடியைக் குறைத்துக் கொண்டவர்கள் பற்றிக் கேட்ட பொழுது, தலைமுடியைக் குறைத்துக் கொண்டவர்களுக்கும்! என்று கூறினார்கள். (புகாரி, முஸ்லிம், இன்னும் பல..)
முஹம்மது (ஸல்) தலைமுடியைக் களைவது பற்றிக் கூறியதை நாம் ஏற்கனவே கூறியிருக்கின்றபடி, தலைமுடிகளைக் களைவது என்பது நீங்கள் ஒரு நற்செயலைச் செய்ததற்கான கூலியைப் பெற்றுத் தரக் கூடியது, மற்றும் உங்களது பாவங்களைப் போக்கக் கூடியது.

ஜம்ஜம் தண்ணீர்

முஹம்மது (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் : இந்தப் பூமியில் உள்ள நீர்களிலேயே மிகச் சிறந்தது ஜம்ஜம் தண்ணீர் ஆகும். அதில் (உடலுக்குத் தேவையான மாற்று) உணவும், ஆரோக்கியத்திற்குத் தேவையானது (சுகமு)ம் இருக்கின்றது.

முஹம்மது (ஸல்) அவர்கள் கூறியதாக ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : ஜம் ஜம் தண்ணீரை எதற்காக அருந்துகின்றீர்ளோ, அதனை அது குணப்படுத்தக் கூடியதாக இருக்கின்றது. (அத்தாரகுத்னீ, அல் பைஹக்கி).
இதன் அர்த்தம் என்னவென்றால், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தங்களுடைய மனைவிமார்களுக்கு, அவர்களுடன் செய்யக் கூடிய இந்த ஒரு ஹஜ் மட்டுமே போதுமானது என்று வரையறுத்து விட்டார்கள் என்பதாகும். எனவே, இது ஒன்றே முஸ்லிம் உம்மத்தில் உள்ள அனைத்துப் பெண்களுக்கும் பொருந்துவதாகும்.

முன்னெச்சரிக்கை அல்லது நினைவூட்டல்கள்

ஹஜ்ஜிற்கான இஹ்ராம் ஆடையை அணிந்து விட்டு ஹஜ்ஜிற்காக தயாராகி விட்ட முஸ்லிம்கள், ஹஜ்ஜிற்கான ஆயத்தத்தில், அதன் கிரியைகளில் அல்லது அதன் சிறப்பு வணக்க வழிபாடுகளில் நாம் நுழைந்து விட்டோம் என்பதை மறந்து விடுகின்றார்கள். அந்த ஆடையை அணிந்த மாத்திரத்திலே ஹஜ்ஜின் பொழுது இறைவன் எவற்றை எல்லாம் தடை செய்திருக்கின்றானோ அவை யாவும் அப்பொழுது முதல் அமுலுக்கு வந்து விடுகின்றது என்பதும், இன்னும் ஹஜ்ஜுச் செய்யாத முஸ்லிம்களின் மீது என்னென்ன தடைகள் உள்ளனவோ அவை சேர்த்தே அமுலுக்கு வந்து விடுகின்றன என்பதையும் மறந்து விடுகின்றார்கள். எனவே, ஹஜ் செய்து விட்டுத் திரும்புகின்ற அவர்களிடம், ஹஜ்ஜுக்கு முன்பு என்னென்ன குறைகள் காணப்பட்டனவோ அதைப் போன்ற குறைகளுடனேயே அவர்கள் தங்கள் இல்லங்களுக்குத் திரும்புகின்றார்கள். இது ஒன்றே போதுமானதாகும் அவர்கள் செய்து திரும்பி இருக்கின்ற ஹஜ் அவர்களிடம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதையும், அவர்கள் செய்திருக்கின்ற ஹஜ்ஜும் சரியாகச் செய்யப்படவில்லை என்பது நமக்குத் தெரிய வரும். ஏன் அவர்கள் செய்திருக்கின்ற ஹஜ் இறைவனால் ஏற்றுக் கொள்ளப்படாமல் திருப்பி விடப்பட்டிருக்கக் கூடாது என்ற எண்ணம் தான் நமக்கு மேலிடுகின்றது. எனவே, என்னருமைச் சகோதர சகோதரிகளே, இறைவனது வரையறைகளைப் பேணி நடக்கவும், அவனது வரையறைகளை மீறாமல் வாழவும் நீங்கள் உங்களது முழுப்பலத்தையும் பிரயோகித்துப் பாடுபடுங்கள். இறைவன் தன்னுடைய திருமறையிலே கூறுகின்றான் :
ஹஜ்ஜுக்குரிய காலம் குறிப்படப்பட்ட மாதங்களாகும்; எனவே, அவற்றில் எவரேனும் (இஹ்ராம் அணிந்து) ஹஜ்ஜை தம் மீது கடமையாக்கிக் கொண்டால், ஹஜ்ஜின் காலத்தில் சம்போகம், கெட்ட வார்த்தைகள் பேசுதல், சச்சரவு - ஆகியவை செய்தல் கூடாது. (2:197)
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
(ஹஜ்ஜின் பொழுது தடைசெய்யப்பட்ட) உடலுறவு போன்ற பாலியல் குற்றங்களைப் புரியாமலும், அல்லது பாவமான காரியங்களில் ஈடுபடாமலும் இருப்பார்களானால், அவர்கள் அன்று பிறந்த பாலகர்களைப் போல தங்களது இல்லங்களுக்குத் திரும்புவார்கள். (புகாரி, முஸ்லிம்).

ரியாஜிகள் பேரவை
ரியாலுள் ஜினான் அரபிக் கல்லூரி 
திருநெல்வேலி பேட்டை






Thursday, June 20, 2019

தண்ணீருக்கான போர்

தண்ணீருக்கான போர்


தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துபவர்களாகவும், இறைவனுக்கு நன்றி செலுத்துபவர்களாகவும் நாம் இருப்போம், இறையருளைப்பெறுவோம்!





தற்போது உலகின் தலையாய பிரச்னைகளில் ஒன்று. நாட்டுக்காகவும்-மொழிக்காகவும்-இனத்திற்காகவும் - மதத்திற்காகவும் மக்கள் சண்டை இட்டுக் கொண்டது பழைய காலம்.

 இனி தண்ணீருக்கான போரை உலகம் காணப்போகிறது.
ஐ.நா.வின் பொருளியல் - சமூக குழுமத்தின் ஆய்வுப்படி உலகில் 70 சதவீதம் மக்கள் பாதுகாக்கப்பட்ட சுத்தமான குடிநீர் இன்றி தவிக்கின்றனர். 1995ம் ஆண்டு மக்கள்தொகை 7 பில்லியனாக இருந்தபோது 100க்கு 88 பேருக்கு போதுமானதாக இருந்த குடிநீர், 2025-ம் ஆண்டு உலக மக்கள்தொகை 80 பில்லியனாக உயரும்பட்சத்தில் 100க்கு 57 பேருக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும்.

உலகில் உள்ள மொத்த நீரின் அளவில் 2.5 சதவீதம் மட்டுமே நன்னீராகும். அதில் 30 சதவீதம் ஏரி, ஆறுகளிலும் 30 சதவீதம் நிலத்தடி நீராகவும், 70 சதவீதம் பனிப்பாறைகளாகவும் உள்ளன.

ஆண்டுதோறும் உலகில் 5 மில்லியன் மக்கள் மாசுபட்ட குடிநீரால் ஏற்படும் நோயால் இறந்து விடுகின்றனர். இது போரில் இறப்பவர்களின் எண்ணிக்கையைவிட 10 மடங்கு அதிகம். இந்தியாவில் தனிநபருக்கான குடிநீரின் இருப்பு 1950ல் 5000 கன மீட்டராகும். அது தற்போது 2000 கனமீட்டராகக் குறைந்துவிட்டது.
இந்தியாவில் ஆந்திரம், அசாம், பிகார், சண்டீகர், தில்லி, குஜராத், ஹரியாணா, ஜார்க்கண்ட், கேரளம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், ஒரிசா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலும், தமிழ்நாட்டில் கோவை, கடலூர், தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கரூர், மதுரை, நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தஞ்சை, தேனி, திருவண்ணாமலை, திருநெல்வேலி, திருவாரூர், திருச்சி, தூத்துக்குடி, வேலூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களிலும் நிலத்தடி நீர் ஆண்டுக்கு 4 மீ. அளவுக்குக் குறைந்து கொண்டே போகிறது.

சிக்கனம் என்பது பணத்தை மட்டும் குறிப்பதல்ல மாறாக, அல்லாஹ்வின் அருட்கொடைகளை பயன்படுத்துவதிலும் சிக்கனத்தை கடைப்பிடிக்க வேண்டும்.


தற்போதைய காலகட்டத்தில், பணம் மற்றும் பொருட்களை சேமிப்பதைவிட இயற்கை வளங்களை பாதுகாப்பதும் அவற்றை சிக்கனமாக செலவு செய்வதும் நம் அனைவரின் கடமையாக இருக்கிறது.

தண்ணீர், உணவு பண்டங்கள், இயற்கை வளங்கள் உள்ளிட்ட அனைத்தையும் தேவைக்கு உட்பட்டே செலவு செய்ய வேண்டும்.

‘மூன்றாம் உலகப்போர் தண்ணீருக்காக வரலாம்’ என்பது அறிஞர்கள் கருத்தாக உள்ளது.

அல்லாஹ் தன் திருமறையில் இவ்வாறு கூறுகிறான்: “உண்ணுங்கள் பருகுங்கள் வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில், அல்லாஹ் அளவு கடந்து வீண் விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை” (திருக்குர்ஆன் 7:31)

தேவைக்கு அதிகமாக செலவு செய்வதும் வீண் விரயமாகவே கருதப்படும். இன்று நாம் பார்க்கிறோம், நம் நாட்டில் திருமணம் போன்ற விசேஷங்களில், அளவுக்கு அதிகமான உணவுகள் வீணடிக்கப்படுகின்றன. சாப்பிடும் தட்டுகளில் ஒருபக்கம் வீணாகிறது என்றால், மறுபக்கம், உணவு பரிமாற தயாராகும் பகுதிகளில் உணவுப்பொருட்கள் வீணா கிறது.

உணவு வீணாவதைப்பற்றி எவ்வித கவலையும் யாருக்கும் இல்லை. ஆனால், ஒருவேளை உணவு இன்றி இந்த உலகத்தில் வாழ்பவர்கள் எண்ணிக்கை பல கோடிகளை தாண்டு கிறது.

உணவு தயாரிப்பவர்களுக்கும், பரிமாறுபவர்களுக்கு உணவு சிக்கனத்தைப்பற்றி நாம் அறிவுறுத்த வேண்டும். அரிசி தட்டுப்பாடு, தண்ணீர் தட்டுப்பாடு என இயற்கை வளங்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவும் காலகட்டத்தில் நாம் வாழ்ந்து வரு கிறோம். எனவே, நாம் மிக கவனமாக இயற்கை வளங்களை கையாளவேண்டும்.

இஸ்லாம் ஒருபோதும், வீண்விரயத்தை விரும்புவதில்லை. அடுத்த தலைமுறைக்கு நாம் சொத்துகளை விட்டுச் செல்ல வேண்டும். சொத்து கள் என்பது பணம் மற்றும் வீடுகள் மட்டுமல்ல இயற்கை வளங்களும்தான்.

தன் வாரிசுகளுக்கு சொத்து சேர்த்து வைப்பதை இஸ்லாம் ஆதரிக்கிறது. இதுகுறித்து முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறும்போது, ‘உங்கள் பிள்ளைகளை யாசகர் களாக விட்டுச் செல்வதைவிட செல்வந்தர்களாக விட்டுச் செல்வது மேலானது’ என்றார்கள்.

இது நம் குடும்ப உறுப்பினர்களுக் கானது என்று மட்டும் எடுத்துக்கொள்ளக்கூடாது, வருங்கால சந்ததிகளை எவ்வகையிலும் ஏழைகளாகவோ அல்லது இயற்கை வளங்களை பயன்படுத்த இயலாதவர்களாகவோ ஆக்கிவிடக்கூடாது. இது ஒரு மிகப்பெரிய சமுதாய பொறுப்பாகும்.

எனவே, இயற்கை வளங்களை சிக்கனமாக பயன்படுத்தி அடுத்த சந்ததிகளும் பயன்படுத்த விட்டுக்கொடுப்போம்.

அல்லாஹ் தன் திருமறையில், ‘காற்றை சூல் கொண்டதாக நாமே அனுப்புகிறோம். பின்னர் வானிலிருந்து நீர் பொழிவித்து அதனை உங்களுக்கும் புகட்டுகிறோம், நீங்கள் அதனை சேமித்து வைப்போராய் இல்லை’ (15: 22) என்று குறிப்பிடு கிறான்.

தண்ணீரை சேமிக்காததால் இறைவனின் கோபமும் நம்மீது விழுகிறது. இறைவனை வணங்குவதற்கு முன்பு செய்யப்படும் ‘ஒளு’ (கை, கால்களை தண்ணீரைக்கொண்டு கழுவி சுத்தம் செய்வது) செய்யும்போது கூட தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அப்போது அங்கிருந்த தோழர் ஒருவர், ‘தண்ணீர் தான் நிறைய இருக் கிறதே’ என்று கூற, அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘பொங்கி வழியும் நதிக்கரையாயிருந்தாலும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்’ என்று அருளினார்கள் என்றால், தண்ணீர் சிக்கனத்தின் அவசியத்தை நாம் உணரவேண்டும்.

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தண்ணீர் அருந்தியபின், ‘இறைவா! நீயே புகழுக்குரியவன், உன்னுடைய தனிப்பெரும் கருணையால்தான் நீ எங்களுக்கு சுவையான தண்ணீரை வழங்குகின்றாய். எங்கள் பாவங் களை நீ மனதில் கொண்டிருப்பாயானால், நீ உப்பு கரிக்கும் நீராகவும், கசப்பான நீராகவும் ஆக்கியிருப்பாய்’ என்று பிரார்த்தனை செய்யும் வழக்கம் உள்ளவர்களாக இருந்தார்கள்.

தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துபவர்களாகவும், இறைவனுக்கு நன்றி செலுத்துபவர்களாகவும் நாம் இருப்போம், இறையருளைப்பெறுவோம்!

தொகுப்பு:

ரியாஜிகள் பேரவை, 
திருநெல்வேலி- பேட்டை.